Tamilசெய்திகள்

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காட்டம்

பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலுக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் காங்கிரஸ் கட்சியின், முதல் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் தெலுங்கானாவில் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, பல மாநிலங்களில் நடக்க இருக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கான தேதியை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் மாநில அளவிலான கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகமும் இருக்காது, தேர்தலும் இருக்காது, சர்வாதிகாரம் மட்டுமே இருக்கும். அமலாக்கத்துறை அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புகிறது. அவர்கள் அனைவரையும் சீண்டிப் பார்க்கின்றனர். பயத்தின் காரணமாக சிலர் நட்பை பிரிகின்றனர், சிலர் கட்சியை பிரிகின்றனர், சிலர் கூட்டணியில் இருந்து பிரிகின்றனர்.

தேர்தலில் வாக்களிக்க இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு, இதன்பின் வாக்களிக்க தேர்தல் இருக்காது. ஜனநாயகத்தைக் காப்பது மக்களின் பணியாகும் என தெரிவித்தார்.