Tamilசெய்திகள்

புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான பிரேசில் நாட்டின் தென்மாநிலம்! – 21 பேர் பலி

பிரேசில் நாட்டின் தென்மாநிலம் ரியோ கிராண்ட் டோ சுல்-ஐ பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் காரணமாக இடைவிடாத கனமழை பெய்ததால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டன. 1,650 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

ரியோ கிராண்ட் டோ சுல் மாநில கவர்னர் எட்வர்டோ லைட் கூறுகையில் ”பருவநிலை மாற்றம் காரணமாக மாநிலத்தில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. இந்த புயலால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது வெப்பம் மண்டல சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் மீட்பு பணியின்போது வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டார். கயிறு கட்டி அந்த பெண்ணை மீட்டபோது, கயிறு அறுந்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற முடியவில்லை” என்றார்.

ரியா கிராண்ட் டோ சுல் பகுதியில் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்கள், மொட்டை மாடியில் இருந்து உதவி கேட்பது போன்ற வீடியோ காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் ஜூன் மாதம் இதுபோன்று பயங்கர சூறாவளி புயல் ஏற்பட்டது. அப்போது 16 பேர் உயிரிழந்தனர். 40 நகரங்கள் பாதிக்கப்பட்டன.