Tamilசெய்திகள்

பெண்கள் உரிமைத்தொகை திட்டம் – அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

பின்னர் சட்டசபையில் இந்தத் திட்டம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டபோது அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர், கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கவே மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் என்ற உரிமைத் தொகை, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலையில் கடற்கரை நோக்கி விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் என பல்வேறு வகைகளில் தங்கள் விலைமதிப்பில்லா உழைப்பைத் தொடர்ந்து வழங்கி வரும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தத் திட்டத்தின் மீது தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 7-ந் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் அனைவரும் நேரடியாக வந்து பங்கேற்க வேண்டும். மாவட்ட அளவிலான மற்ற அதிகாரிகளான போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் கலெக்டர்கள், சப்-கலெக்டர், வருவாய் மண்டல அதிகாரி, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள், கூட்டுறவு இணை பதிவாளர்கள், ஊராட்சி கூடுதல் இயக்குனர்கள், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியல் திட்ட இயக்குனர், தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி, வங்கி அதிகாரிகள், மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் ஆன்லைன் மூலம் இந்த கூட்டத்தில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.