Tamilசெய்திகள்

பெல்ஜியத்தில் தாயை கொலை செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து வீசிய மகன் கைது

பெல்ஜியம், லீஜ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சந்தேகிக்கும் வகையில் பொருள் ஒன்று மிதந்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொருளை மீட்டு பார்த்தபோது அது குளிர்சாதனப் பெட்டி என்று தெரியவந்தது. மேலும், அந்த பெட்டியில் மனிதக்கை, கால் பாகங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கிடைத்த உடல் பாகங்களை கொண்டு ஆய்வு செய்தனர். இதில், அந்த உடல் பாகங்கள் 70 வயது மதிக்கத்தக்க பெண்ணுடையது என்று தெரியவந்தது.

மேலும், துப்பறியும் நபர்களால் அந்தப் பெண்ணின் உடலின் எஞ்சிய பகுதிகளான தலை மற்றும் உடற்பகுதி அருகிலுள்ள குப்பை குவியலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், பெண்ணை கொலை செய்தது அவருடைய 30 வயது மதிக்கத்தக்க மகன் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, பெண்ணின் மகனை பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலில் இருந்து விடியற்காலையில் கைது செய்தனர். தென் கொரியாவுக்கு விமானத்தில் செல்ல தயாராகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கேத்தரின் கொலிக்னான் கூறினார்.

மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் தனது தாயை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஆற்றில் வீசியதாக ஒப்புக் கொண்டுள்ளார். லீஜின் தென்மேற்குப் பகுதியான செராயிங்கில், அந்தப் பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பேரக்குழந்தையுடன் வசித்து வந்தார்.

கொரோனா தொற்று ஊரடங்கிற்கு பிறகு, பெண்ணும் அவரது மகனும் வசித்து வந்த நிலையில், இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதங்களும், பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரத்தில் தாயை கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி தூக்கி எறிந்தது தெரியவந்தது. இதையடுத்து, நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை போலீசார் காவலில் வைத்துள்ளனர்.