Tamilசெய்திகள்

பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையாக – அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் இன்று அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொல்லானின் 218-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. விரைவில் பொல்லானுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும். கர்நாடகாவில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 180 எம்.எல். பாட்டிலில் மது விற்கப்படுகிறது. அதை முழுமையாக குடிப்பதற்கு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே தான் அது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. டெட்ரா பேக் மதுவில் கலப்படம் செய்ய முடியாது. டாஸ்மாக் மது கடைகளை முன்கூட்டி திறக்கும் எண்ணம் இல்லை. காலை 7 முதல் 9 மணி வரை வேலைக்கு செல்பவர்கள் தவறான இடத்திற்கு செல்லக்கூடாது என்பதற்காகத்தான் ஆய்வு நடத்தப்பட்டது.

டாஸ்மாக் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் பிரச்சனை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடத்தப்பட்டு தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கடைகளில் கூடுதல் தொகை வசூலிப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதிகம் குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது 2 அல்லது 3 மாவட்டங்களுக்கு செல்லும். டாஸ்மாக் கடை பணியாளர்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். அதற்கு கீழ் உள்ளவர்கள் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும்.

டெட்ரா பாக்கெட் சின்னதில் பிரச்சனை உள்ளது. கண்ணாடி பாட்டிலில் வழங்கப்படும் மதுவில் கலப்படம் தடுக்கவும், சேதமடைவதை தவிர்க்கவும் யோசனை சொல்கின்றனர்.டெட்ரா பாக்கெட் ஆய்வில் தான் உள்ளது. பெரும்பாலான கடைகளில் அதிகளவு விற்பனையாகும் மது குறித்து சர்வே எடுத்து வருகின்றனர்.

பொதுமக்கள் எதிர்பார்க்கும் மதுவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் 15 இடத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள் அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்க த்துறையினர் சோதனை செய்து வருவது குறித்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி கூறும் போது, அமைச்சர் பொன்முடி என்ன தவறு செய்தார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? அமலாக்கத்துறை சோதனை பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையாக தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றார்.