Tamilசெய்திகள்

மழை நிலவரங்களை கண்காணித்து வரும் அவசரகால செயல்பாட்டு மையம்

இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் சென்னையில் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் திரள் மேகக்கூட்டங்கள் ஒரு சேர வந்து குவியும் இடத்தில் மழை பெய்ததை பார்க்க முடிந்தது.

அந்த வகையில் சென்னை கொரட்டூர், பாடி, அம்பத்தூர், முகப்பேர் போன்ற பகுதிகளிலும், எழும்பூர், கோடம்பாக்கம், தியாகராயநகர், அண்ணா நகர், திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் பல இடங்கள் மழைநீர் சூழ காட்சி அளித்தன.

இந்நிலையில் மழை நிலவரங்களை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் இருந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு தொலைபேசியில் பாதிப்பு விவரங்களை பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் அழைப்புகள் உடனுக்குடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.