Tamilசெய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின், அவரது கட்சியினரிடம் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தல் உள்ளிட்ட பணிகளைப் பற்றி பேசுவதில் எனக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல், அவருடைய பேச்சில், பாதிக்கும் மேல் என்னைப் பற்றி பேசியதில் இருந்தே, அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்பது நன்கு விளங்குகிறது. மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழாவில் பேசும் போது, 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகத் தம்பட்டம் அடித்தார். அதனால்தான், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு அவற்றின் நிலை என்ன என்று நான் கேட்டேன்.

அம்மா அரசில் தொடங்கப்பட்டு, தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற சில முக்கியத் திட்டங்களான அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன மானியம், பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்தும், மாநில நிதியில் செயல்படுத்தப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம் உட்பட ஓராண்டுக்குள் நிறைவேற்றி இருக்கக்கூடிய பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் இன்று வரை இழுத்தடித்துக் கொண்டிருப்பது என்று தமிழக மக்களிடையே பெரும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

பா.ஜ.க-விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க. அடகு வைத்துள்ளதாகப் பேசியுள்ளார். ஆனால், 1999-ம் ஆண்டு, ஆட்சி அதிகாரத்திற்காக 5 ஆண்டுகள் பா.ஜ.க-வின் அடிமையாக தி.மு.க.-தான் இருந்துள்ளது என்பதற்கு என்ன பதில் கூறப்போகிறார். மேலும், 2006 முதல் 2011 வரை தமிழகத்தில் தி.மு.க. அரசு, ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும், மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு அச்சாரமிட்டதை ஸ்டாலின் வசதியாக மறந்துவிட்டாரா?

தி.மு.க. நிர்வாகிகளின் எல்லை மீறிய தவறுகள் சமூக ஊடகங்களில் வெளிவந்த போது, தவறு செய்யும் தி.மு.க. நிர்வாகிகள் மீது சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்று சினிமா வசனம் பேசி 18 மாதங்களுக்கு மேல் ஆகிறது. தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் / தொண்டர்களின் மக்கள் விரோதச் செயல்கள்; அதிகார அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால், ஸ்டாலின் தான் இன்னும் சர்வாதிகாரியாக மாறவில்லை.

மகளிர் இருசக்கர வாகன மானியத் திட்டம்; தாலிக்குத் தங்கம் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவிட்டு, அந்நிதியைக் கொண்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கியுள்ளார். அதையும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு அனைத்து குடும்பப் பெண்களுக்கும் வழங்கவில்லை. பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால் பாதிக்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை. அதுபோலவே, 42 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெற்று வரும் 1,000/-ரூபாய் ஓய்வூதிய உதவித் தொகையை, 1,200 ஆக உயர்த்தி வழங்குவதாக பெருமை பேசியுள்ளார்.

ஆனால், தேர்தல் வாக்குறுதியில் முதியோர் ஓய்வூதியம் ரூ.1,000-த்திலிருந்து ரூ. 1,500-ஆக அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். பாதி ஆட்சிக் காலமே முடிவடைந்துவிட்டது. ஆனால், இன்னும் முதியோர் ஓய்வூதியம் 1,500 ஆக உயர்த்தப்படவில்லை. தேர்தல் நேரத்தில், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று சொல்லி விட்டு, தற்போது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் இந்த நாடகம் எதற்கு?

29 மாத கால ஆட்சியில் கல்வித் துறையை சீரழித்துவிட்டார்கள் என்று நாங்கள் மட்டும் கூறவில்லை; அனைத்து ஆசிரியர் சங்கங்களும்; ஆசிரியப் பெருமக்களும் இந்த தி.மு.க. ஆட்சியை திட்டுவது இன்னும் ஸ்டாலின் காதுகளுக்கு எட்டவில்லையோ? ஸ்டாலின் திருவண்ணாமலையில் அவரது கட்சியினரிடம் பேசும்போது, என்னை பச்சைப் பொய் பழனிசாமி என்று பேசியுள்ளார். பொய் பேசுவதில் கை தேர்ந்தவர் ஸ்டாலின். பொய் பேசுவதில் கை தேர்ந்தவர் ஸ்டாலின். பொய் பேசுவதில் ‘நோபல் பரிசு’ கொடுப்பதாக அறிவித்தால், ஸ்டாலினுக்குத்தான் பொருத்தமாக இருக்கும்.

நான் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, எங்களுடைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் உள்ளிட்டவற்றையும், அம்மாவின் அரசால் ஆரம்பிக்கப்பட்ட, நடைபெற்று வந்த மற்றும் முடிவுற்ற பணிகளையும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும், புதிதாக கட்டப்பட்ட பாலங்களையும், தமிழக நகரங்களில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் முடிவுற்ற பணிகளையும் தான் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன்.

ஸ்டாலினிடம், உங்களது 29 மாதகால தி.மு.க. ஆட்சியில், தமிழக மக்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்ன என்று கேட்டால், அதைப் பற்றி பேசாமல், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக தமிழக மக்களிடையே பொய் பேசுகிறார். ஏனெனில், 29 மாத கால ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக ஸ்டாலின் எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை; செயல்படுத்தவில்லை.

தான் வகிப்பது பெருமைமிக்க முதலமைச்சர் பதவி என்பதை மறந்து, என் மீதும், அ.தி.மு.க.வின் மீதும் பாய்ந்து பிறாண்டியிருப்பது, ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்’ என்ற பழமொழியை நிரூபிப்பதாக உள்ளது. இனியாவது ஸ்டாலின் பொய் பிரசாரத்தை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டில் நிலைமை என்ன, தமிழக மக்கள் தி.மு.க.வைப் பற்றியும், அவரைப் பற்றியும் என்ன பேசுகிறார்கள் என்று தனது காவல்துறையை வைத்து விசாரித்துவிட்டு, இனியாவது உண்மையாகவே தமிழக மக்களுக்குபயனளிக்கும் வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.