Tamilசினிமா

விஜய் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் விதிமீறல்! – அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்

நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியாகி உள்ளது. புதுவையில் நகரம் மற்றும் கிராம பகுதியில் உள்ள 15 திரையரங்குகளில் ‘லியோ’ படம் வெளியாகியுள்ளது. நேற்று காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என புதுவையில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் காலை 9 மணிக்கு படம் வெளியானதாலும் விநியோகஸ்தர்கள் அனுமதி அளிக்காத காரணத்தினால் காலை 9 மணிக்கே புதுவையில் லியோ திரையிடப்பட்டது. வழக்கமாக விஜய் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் பேனர், கட் அவுட்டுகளை வைத்து கொண்டாடுவது வழக்கம்.

பால் அபிஷேகம், பீர் அபிஷேகம், பூ அபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். ஆனால் இந்த முறை பேனர், கட்அவுட் திரையரங்குகள் முன் வைக்கப்படவில்லை. இருப்பினும்ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவில்லை. திரையரங்குகள் முன்பு காலை 7 மணி முதலே ரசிகர்கள் திரள தொடங்கினர். பேண்டு வாத்தியம் முழங்க பட்டாசு வெடித்தும், நடனமாடினர். கேக் வெட்டி சக ரசிகர்களுக்கு வழங்கினர்.

காமராஜர் சாலையில் விஜய் ரசிகர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்லும் நேரம் என்பதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தியேட்டருக்குள் காலை 8.30 மணிக்கு பிறகே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்றனர்.

படத்தின் தொடக்கத்தில் விஜய் பெயர் திரையில் ஒளிர்ந்த போதும், விஜய் திரையில் தோன்றிய போதும் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பியதில் தியேட்டர் அதிர்ந்தது. இதனிடையே விதி மீறி சாலையில் நிறுத்தப்பட்ட விஜய் ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த நோட்டீசை ஒட்டினர். மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.200 அபராதம் என்ற அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது நோட்டீஸ் ஒட்டப்பட்டது.