Tamilசெய்திகள்

5 மாநில சட்டபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிப்பு – முன் கூட்டியே பிரசாரத்தை தொடங்கும் பா.ஜ.க

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக்டோபர் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்கின்றனர். அப்போது 5 மாநிலங்களின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர். தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணத்திற்கு பிறகு தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்தவாரம் 5 மாநிலங்ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை அந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் பா.ஜ.க. சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து உள்ளது. ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள பா.ஜ.க வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

தேர்தல் பணியை தொடங்கி சுறுசுறுப்பாக பணி செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தெலுங்கானாவில் 2 நாட்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார். இதேபோல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது. தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.