தபால் வாக்குகளைச் சேகரிக்க 86 குழுக்கள் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது இல்லங்களிலிருந்தே தபால் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 5,407 வாக்காளர்கள் தங்கள் இல்லங்களிலிருந்தே தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு 1,426 வாக்காளர்களிடமும் (658 மூத்த குடிமக்கள், 768 மாற்றுத்திறனாளிகள்), திருச்செந்தூர் தொகுதியில் 15 குழுக்கள் மூலம் 1,387 வாக்காளர்களிடமும் (800 மூத்த குடிமக்கள், 587 மாற்றுத்திறனாளிகள்) வாக்குகள் சேகரிக்கப்படவுள்ளன.
மேலும், விளாத்திகுளம் தொகுதியில் 11 குழுக்கள் மூலம் 731 வாக்காளர்களிடமும், தூத்துக்குடி தொகுதியில் 12 குழுக்கள் மூலம் 638 வாக்காளர்களிடமும், கோவில்பட்டி தொகுதியில் 12 குழுக்கள் மூலம் 615 வாக்காளர்களிடமும் தபால் வாக்குகள் பெறப்படுகின்றன. குறைந்தபட்சமாக ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 12 குழுக்கள் மூலம் 610 வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 2,935 மூத்த குடிமக்கள் மற்றும் 2,472 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 86 வாக்கு சேகரிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, வாக்குச் சேகரிக்கும் பணி நேற்று (12.04.2026) காலை 9 மணி முதல் தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு வாக்கு சேகரிப்பு குழுவிலும் இரண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள், ஒரு நுண்பார்வையாளர் (Micro Observer), ஒரு ஆயுதம் தாங்கிய காவலர் மற்றும் ஒரு வீடியோ கிராபர் (Videographer) எனப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். படிவம் 12-D இல் விருப்பம் தெரிவித்த அனைத்து வாக்காளர்களிடமும் வாக்குகள் பெற்று முடிக்கப்படும் வரை இந்தப் பணி தொடரும்.
இப்பணிக்குத் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
