Tamilசெய்திகள்

9 மாதகால சிகிச்சைக்குப் பிறகு கொரோனாவில் இருந்து மீண்ட பெண்மணி

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 15 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும்போதும் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்மணி 9 மாதகால தீவிர சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

cஅமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தின் மையாமி நகரில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றிவந்தவர் ரோசா பிலிப் (41). மருத்துவமனையில் பணியாற்றிவந்த ரோசாவுக்கு கடந்த மார்ச் 9-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் தான் பணிபுரிந்துவந்த அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால், கொரோனா சிகிச்சை அளிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

இதை தொடர்ந்து அவரது உடலில் ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனாவின் தீவிரத்தால் அவருக்கு நுரையீரல் செயலிழந்ததையடுத்து டையாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இத்தனை சிகிச்சை முறை மற்றும் கொரோனாவால் ரோசாவின் கை விரல்கள் கருமை நிறத்திற்கு மாறிவிட்டது. மேலும், அவரின் கால்களின் செயல்பாடுகள் பெருமளவு முடங்கியது. அவர் தனது படுக்கையில் இருந்து எழ முயற்சி செய்யும்போதெல்லாம் அவரது ரத்த அழுத்தத்தின் அளவு குறைந்துள்ளது.

ஒரு கட்டத்தில் கொரோனாவின் உச்சபட்ட பாதிப்பால் அவதிப்பட்ட ரோசா இனி உயிர்பிழைக்கமாட்டார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நினைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட ரோசாவுமே தான் இனி உயிர் பிழைக்கமாட்டோம் என எண்ணியுள்ளார்.

ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அவர் 2 மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்களின் விடா முயற்சியாலும், ரோசாவின் தன்னம்பிக்கையாலும் அவர் 9 மாதகால சிகிச்சைக்கு பின் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.

9 மாதங்களுக்கு பின்னர் கொரோவில் இருந்து நேற்று (டிசம்பர் 9) குணமடைந்த ரோசா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது வீட்டிற்கு செல்ல மருத்துவமனையை விட்டு வெளியே வந்த ரோசா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா உண்மையானது. அதன் பாதிப்புகளும் உண்மையானவை. ஆனால், இங்கு பெற்ற அன்பு அதைவிட மிகவும் உண்மையானது, நான் உணர்ச்சிகளை கடக்க முயற்சிக்கிறேன். ஏனென்றால் உயிர்பிழைப்பேன் என்று நினைக்கவில்லை.

நான் இனி கைவிட்டுவிட நினைக்கமாட்டேன். நான் இனி மேலும் மேம்படப்போகிறேன்.

என்றார்.