தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும் – தொல்.திருமாவளவன்
நெல்லையில் ஆணவப் படுகொலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவினின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை செய்யும் என பெரிதும் நம்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக சாதிய மற்றும் மதவாத சக்திகள் சாதிப்பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடித்து, இதுபோன்ற கொலைகளை ஊக்கப்படுத்துகின்றார்கள்.
அவர்கள் பரப்பும் சாதி பெருமை அரசியல் தான் இதுபோன்ற கொலைகளுக்கு காரணமாக இருக்கிறது. தேசிய அளவில் ஆணவக்கொலை தடுப்புச்சட்டம் இயற்றப்பட வேண்டும். இதற்காக பலரும் குரல் எழுப்பினாலும், ஒன்றிய அரசு இந்த கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. தமிழ்நாடு உட்பட மாநில அரசுகளும் இதனை கண்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
