நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவி ஏற்றார்!
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் போராட்டத்தில் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷீலா கார்கி நீடித்து வந்தார்.
இதற்கிடையே புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில், பாலேந்திர ஷாவின் ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி மொத்தம் உள்ள 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை விட 49,614 வாக்குகள் அதிகம் பெற்று அவரைத் தோற்கடித்தார்.
இந்த நிலையில், நேபாள நாட்டின் 47 வது பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். முன்னாள் மேயரும், ராப் பாடகருமான பாலேந்திர ஷா இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு காத்மாண்டுவில் பிறந்த பாலேந்திர ஷா, கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் Structural Engineering முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். நேபாளம் நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள பாலேந்திரா ஷாவுக்கு 35 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
