X

த.வெ.க ஆட்சிய கவிழ்க்க நடந்த பேரம்! – செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு

108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அதே நேரம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள்.

இதுபற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், குதிரை பேரம் நடத்துவதாக த.வெ.க. மீது குற்றம் சாட்டியிருந்தார். மறுபுறம் கட்சி மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க. அரசு நடைபெறுகிறது. எனவே தமிழகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறினார்.

தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 2 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யுமாறு பேரம் நடைபெறுவதாக தி.மு.க. சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சமீபத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சை சுட்டிக்காட்டி இருந்தனர்.

இந்நிலையில் சட்​டப்​பேர​வை​யில் சபா​நாயகருக்கு எதி​ராகத் தீர்மானம் கொண்டு வர உள்​ள​தாக​வும் ஆளும் கட்சி உறுப்​பினராக இருந்​தா​லும் நாங்​கள் சொல்​வது போல் கேட்டு சபாநாயகருக்கு எதி​ராக வாக்​களிக்க வேண்​டும் என்​றும், அதற்கு ரூ.35 கோடி வரை பணம் கிடைக்கும் என்றும் கிருஷ்ணகிரி மாவட்​டம் ஊத்​தங்​கரை தொகுதி தவெக எம்​எல்ஏ இளையராஜாவிடம் சிலர் பேசி உள்ளனர். இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து இளையராஜா புகார் அளித்தார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 3 பேரை கைது செய்தனர். கைதான 3 பேரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை சென்னையில் வைத்து சந்தித்து பேசியதாகவும், செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் கூறிய அறிவுரையின் பேரிலேயே எம்எல்ஏ இளையராஜாவுடன் பேசியதாக வாக்குமூலம் அளித்தனர்.

கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த புகார் தொடர்பாக திமுக பிரமுகர்களான சக்தி மெஸ் கார்த்தி, ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், குற்றச் சதிக்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசியதை வெளியே சொன்னால் குடும்பத்தினர் உயிரோடு இருக்க முடியாது என திருநாவுக்கரசு மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒத்துழைக்காவிடில் உயிருடன் நடமாட முடியாது என இளையராஜாவை மிரட்டியதாக எஃப்ஐஆரில் தகவல் வெளியாகி உள்ளது.