X

கேரளாவில் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆட்சி செய்கிறார்கள் – பா.ஜ.க. எம்.எல்.ஏ தாக்கு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நேமம் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜகோபால் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண் பக்தர்கள் வருவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண பா.ஜ.க. போராடி வருகிறது. இந்த பிரச்சினையில் தமிழகத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர்.

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடக்கும் சமயத்தில் சபரிமலைக்கு 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். தற்போது கேரளாவில் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். அதனால்தான் சபரிமலையின் புனிதத்தை கெடுக்க பினராயி விஜயன் பல்வேறு கருத்துகளை தெரிவித்து சதி செய்து வருகிறார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வந்த பெண்கள் பக்தர்களே இல்லை. சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் கடவுள் மறுப்பாளர்களும், வேற்று மதத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே வந்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.

எனவே தென் மாநில முதல்-அமைச்சர்களை ஒருங்கிணைந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பாக இறுதி முடிவை எடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த போதிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த வழி வகை செய்தது. அதே போல்கேரள அரசும் சபரிமலை அய்யப்பன் கோவில் பிரச்சினைக்கு சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.