Tamilசெய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு பூஜை காலங்களில் மாற்றம்!

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ம் தேதியை முன்னிட்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

பின்னர் காலை 8 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு அன்னாபிஷேகம், உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.

தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவில் கலையரங்கில் பொது விவரக்குறிப்பேடு வெளியிடுதல், பக்தி சொற்பொழிவு, பரத நாட்டியம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.