தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையும் குறித்து முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் நெ. மரிய வில்சனுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திருத்திய நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், வேளாண்மை நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியையும், அனைத்து தரப்பு விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.