பெண்கள் மட்டுமே கட்டணம் இல்லாமல் பயணிக்கும் பிங்க் பஸ்கள் இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் ‘பிங்க்’ பஸ்கள் இயக்கத்தினையும், பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு 50 பொலீரோ வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகளிர் விடியல் பயணம் திட்டம் (கட்டணமில்லா பஸ்) கடந்த மே 2021-ல் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று, 5 வழித்தடங்களில் ஒவ்வொரு வழித்தடத்திலும் 2 பஸ்கள் என மொத்தம் 10 பஸ்கள் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் பஸ்களின் இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த பஸ்களின் கண்டக்டர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இப்பஸ்கள், பிராட்வே முதல் எண்ணூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம், செங்குன்றம் முதல் வள்ளலார் நகர் பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளது.
அதேபோல், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு பிரத்யேகமாக 50 பொலீரோ 4 சக்கர வாகனங்கள் மற்றும் 5 பிங்க் ஆட்டோ சேவையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
