Tamilசெய்திகள்

கோவையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக புத்தொழில் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வருகிற அக்டோபர் மாதம் 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு கோவையில் நடைபெற உள்ளது. முதல்நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டிற்கான லோகோவையும் இணையதளத்தையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் 19 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளர்களுடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியாவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மத்திய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத்துறைகளும் பங்கேற்க உள்ளன. 750-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகிறது. 315-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தலைமை செயல் அலுவலர் பதவியுடன் 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து, தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக இந்த ஸ்டார்ட் அப் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்டார்ட் அப் தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்தில் இருந்தது. 2021-ம் ஆண்டு மூன்றாம் இடத்திற்கு முன்னேறி, லீடர் விருதை பெற்றோம். 2022-ல் சிறந்த செயல்பாட்டாளர் விருதை பெற்றது. தற்போது முதல் இடத்தில் நிற்கிறோம். இந்தியாவின் இதுவரை எங்கும் நடக்காத ஸ்டார்ட்அப் மாநாடு நடைபெறுகிறது. மற்ற மாநிலங்கள் வியக்கக்கூடிய அளவில் இது நிச்சயம் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.