போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு. தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை? தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது? வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து – விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர். ஆணவம் அழிவிற்கு வழி!” என்று பதிவிட்டுள்ளார்.
