10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 ஆம் தேதி தொடங்குகிறது
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதனால் அரசு பொது தேர்வுகளை விரைவாக முடிக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் 11-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 4219 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கின செயல்களை ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 4954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகிறது.
வினா தாள்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகாமல் இருக்கவும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு விடைத்தாள்கள் அன்று காலையில் செல்வதற்கான ஏற்பாடுகள் கல்வி அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்விற்கும் போதுமான இடைவெளி விடப்பட்டுள்ளது மாணவர்கள் அனைத்து தேர்வையும் படித்து எழுதுவதற்கு வசதியாக அதிக விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
