உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை கோவையில் திமுக இளைஞரணி மாநாடு
தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு கோவை கருமத்தம்பட்டி கணியூர் டோல்கேட் அருகில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி உரையாற்றுகிறார். துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி வரவேற்கிறார். அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள், மாவட்ட, மாநகர செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் நன்றி கூறுகிறார்.
மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம் , கிளை மற்றும் வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து கலந்து கொள்ள உள்ளனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
இதையொட்டி கணியூர் டோல்கேட் அருகில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டுதிடலின் முகப்பு அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கு மண்டல தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜிநேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். அவரது வழிகாட்டுதலின்பேரில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதிமுருகேசன் மாநாட்டு பந்தலில் நடைபெறும் பணிகளை உடனிருந்து கவனித்து வருகிறார்.
மேற்கு மண்டல தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 39 சட்டசபை தொகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு மாநாட்டு பந்தலிலேயே உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
