Tamilசெய்திகள்

மிரட்டக் கூடாது, அத்து மீறக்கூடாது – போலீஸ் காதலர் தின எச்சரிக்கை

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளர்த்தாலும் காதலர் தினத்தை தங்களது ‘ஸ்பெஷல்’ தினமாக காதலர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் மெரினா, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தனியார் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் இன்றைய தினம் அதிகளவில் கூடுவார்கள்.

காதல் புனிதமானது என்பது காதலர்களின் வேத வாக்காக இருந்தாலும், இது தமிழ்நாட்டின் பண்பாடு, கலாசாரத்துக்கு எதிரானது என்பது இந்து அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புகளின் கோஷமாக இருக்கிறது. மேலும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது அவர்களது வலியுறுத்தலாக இருந்து வருகிறது.

எனவே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்துவது வழக்கம். இதனால் காதலர் தினத்தன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட காதலர்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் காதலர் தினத்தையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். காதலர்களை மிரட்டும், அச்சுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோன்று பொதுஇடங்களில் எல்லை மீறும் காதல் ஜோடிகள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.