Tamilசெய்திகள்

டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்திக்க டாக்டர்.ராமதாஸ் திட்டம்

பா.ம.க.வின் செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு, அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் அடிப்படையில், 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணி ராமதாஸ் பா.ம.க. தலைவராக தொடர்வார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்தலின்போது ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணி ராமதாஸுக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அன்புமணி கையொப்பமிட்ட படிவங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து ராமதாஸ் தரப்பு அணி ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ அருள், பொதுச்செயலாளர் முரளி சங்கர், சட்ட ஆலோசகர்கள் அருள் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தனர். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் தரப்பு அணியினர் கூறுகையில்,

பா.ம.க. கட்சியில் ராமதாஸ் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். அதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் அந்த விவகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாம்பழச் சின்னம் ராமதாஸ் அணிக்கு மட்டும் தான் சொந்தமாகும். ராமதாஸ் தரப்பில் 12 கடிதங்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவை அனைத்து மறைக்கப்பட்டு, போலியான ஆவணங்களை அன்புமணி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் எங்களது கடிதங்களை ஆய்வு செய்து ஒரு நியாயமான முடிவை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை என்றால், ராமதாஸ் அணி தரப்பில் இருந்து கண்டிப்பாக நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் மன்றம் ஆகியவை முன்னிலையில் எங்களது கோரிக்கையை முன்வைத்து சட்ட போராட்டங்களை மேற்கொள்வோம். பா.ம.க. கட்சி விவகாரத்தில் ராமதாசை ஏமாற்ற மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் பா.ம.க.வை தங்கள் வசம் கொண்டு வருவதற்கான பணிகளில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்புமணி தரப்பு பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததாக கூறப்படும் நிலையில் அவர் டெல்லி செல்கிறார். ஓரிரு வாரங்களில் ராமதாஸ் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.