Tamilசெய்திகள்

வாக்காளர் பட்டியல் குறித்து தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்!

பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது. பணிகள் முடிந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்களில் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய தேர்தல் ஆணையத்தின் சதி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த அம்மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் பரபரப்பு குற்றச்ச்சாட்டை முன்வைத்தார்.

வலைத்தளத்தில் EPIC நம்பர் உள்ளீடு செய்து பார்த்தபோது தனது பெயர் வாக்காளர் பட்டியலில் காட்டவில்லை என அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியான பதிலளித்த தேர்தல் ஆணையம், “வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் ஒரு விளையாட்டுத்தனமான கூற்றை கூறியிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் வரிசை எண் 416 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறும் எந்தவொரு கூற்றும் தவறானது மற்றும் உண்மைக்கு மாறானது” என்று தெரிவித்துள்ளது.