Tamilசெய்திகள்

கோவா இரவு விடுதி தீ விபத்து – வெளிநாட்டுக்கு தப்பி சென்ற லூத்ரா சகோதரர்கள் கைது

கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, ‘பிர்ச் பை ரோமியோ லேன்’ இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி ஊழியர்கள் 20 பேர், வாடிக்கையாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இந்த விடுதியின் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகிறது. கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

முன்னதாக கோவா காவல்துறை நடத்திய விசாரணையில், விபத்து நடந்ததும் தீயணைப்புப் படையினரும் பிற மீட்புப் படையினரும் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர்.

விபத்து நடந்த சில மணி நேரங்களில் அதிகாலை 1:17 மணிக்கு, இருவரும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இருவரும் அதிகாலை 5:30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறினர். தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

இந்தச் சகோதரர்களைப் பிடிக்க சிபிஐ கோரிக்கையின் பேரில் இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரவு விடுதியின் இணை உரிமையாளரான அஜய் குப்தா டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லூத்ரா சகோதரர்கள் பாஸ்போர்ட்களை ரத்து செய்வது குறித்து வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

மேலும் திங்களன்று, இதேபோன்ற முறையில் இயங்கி வந்த ரோமியோ கிளப்புக்குச் சொந்தமான இரண்டு இரவு விடுதிகளை அதிகாரிகள் மூடினர். இதற்கிடையே லூத்ரா சகோதரர்கள் சார்பில் முன்ஜாமீன் கோரி டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட வணிகப் பயணத்திற்காக தாய்லாந்து சென்றதாக அவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மனு குறித்து நாளை விசாரணை நடைபெறுகிறது. ஆனால் இருவருக்கும் ஜாமீன் வழங்குவதை கோவா காவல்துறை கடுமையாக எதிர்த்துள்ளது.