X

முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை திருச்சி செல்கிறார்!

த.வெ.க-வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்களை நடத்த எம்.எல்.ஏ-க்களுக்கு ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், தோல்வி அடைந்த வேட்பாளர்களும் அவர அவர் தொகுதியில் நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, த.வெ.க எம்.எல்.ஏக்கள் நன்றி அறிவிப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற சென்னை, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்துள்ளார். பெரம்பூர் தொகுதி வைத்துக் கொண்டு, திருச்சி தொகுதியை ராஜினாமா செய்துவிட்டதால், அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்று அவர்களுக்கு நன்றி தெரிவிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி, நாளை முதலமைச்சர் ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கு செல்ல இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து டி.எ.எஸ் டோல்கேட் பழைய பால் பண்ணை, சத்திரம் பஸ் நிலையம் வழியாக திறந்தவெளி நின்றபடி பொதுமக்களுக்கு அவர் நன்றி தெரிவிக்கிறார்.

தொடர்ந்து, மாலை 4 மணிக்கு திருச்சி, புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, மக்களுக்கு விஜய் நன்றி தெரிவிக்கிறார். இதற்காக அங்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளையும் விஜய் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் திருச்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட உள்ளது.