இந்தியாவில் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா
இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராக வருவார் என்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஓவைசி, “பாகிஸ்தான் அரசியலமைப்பு முஸ்லிம் அல்லாதவர்கள் உயர்பதவிக்கு வருவதைத் தடுக்கிறது. ஆனால், இந்திய அரசியலமைப்பு யாருக்கும் தடை விதிக்கவில்லை. இந்தியாவில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த ஒரு மகள் பிரதமராக வருவார் என்பது எனது கனவு” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “அரசியலமைப்பு ரீதியாக யாரும் பிரதமராகலாம், அதில் தடையில்லை. ஆனால் இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது. இந்தியாவின் பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் பூனாவாலா இதுபற்றி பேசுகையில், “பிரதமர் பதவி பற்றிப் பேசுவதற்கு முன்பு, ஓவைசி தனது சொந்தக் கட்சியில் ஒரு ஹிஜாப் அணிந்த பெண்ணையோ அல்லது இஸ்லாமியர்களில் பஸ்மாந்தா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையோ தலைவராக்கிக் காட்டட்டும்” என்று சவால் விடுத்தார்.
