போராட்டத்தில் 77 பேர் உயிரிழந்த விவகாரம் – நேபாள முன்னாள் பிரதமர் கைது!
நேபாள நாட்டின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று அதிகாலை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் சமூக ஊடகத் தடைக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டிற்கு எதிரான ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக மாறியது. ஜென் ஜி தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறையால் 77 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாள காவல்துறையினர் இன்று (மார்ச் 28) அதிகாலை பக்தபூரில் உள்ள கே.பி.சர்மா ஒலியின் இல்லத்தை முற்றுகையிட்டு அவரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரது ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லெக்ஹாக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்கத் தவறான உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சர்மா ஒலியின் கைதுக்குப் பிறகு நேபாளத்தின் புதிய உள்துறை அமைச்சர் சூடன் குருங், தனது எக்ஸ் தளத்தில், , “கொடுத்த வாக்குறுதி என்பது வாக்குறுதிதான், சட்டத்திற்கு மேல் எவரும் கிடையாது. இது யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் செய்யப்பட்ட நடவடிக்கை அல்ல. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரு ஆரம்பம் மட்டுமே. இந்த நடவடிக்கை நேபாள அரசியலில் ஒரு புதிய திசையை உருவாக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
