காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து முதல் முறையாக பேசிய நீதிபதி கவாய்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.
அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தபோது, “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்” என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.
இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், காலணி வீச முயன்ற சம்பவம் குறித்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இந்த சம்பவம் குறித்து பேசிய தலைமை நீதிபதி, “வழக்கறிஞர் ஒருவர் தன் மீது காலணி வீசிய சம்பவத்தால் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானேன். ஆனால், அது ஒரு மறக்க வேண்டிய கடந்தகால நிகழ்வாகவே பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.
