பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன் – கீழடி குறித்து கோரிக்கை
கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார். ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.
இந்நிலையில், கீழடி அகழாய்வு தொடர்பாக பிரதமர் மோடியை மாநிலங்களவை எம்.பி. கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன். அவற்றுள் தலையாயது கீழடி.
தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
