கரூர் 41 பேர் உயிரிழப்பு வழக்கு – சிபிஐ விசாரணைக்காக நாளை விஜய் டெல்லி செல்கிறார்
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட பலரிடம் டெல்லி சி.பி.ஐ. அலுவல கத்தில் விசாரணை நடந்தது.
மேலும் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகுமாறு கட்சி தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு விஜய் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஏற்கனவே 2 முறை விசாரணைக்கு விஜய் ஆஜராகி உள்ள நிலையில் மீண்டும் அவர் ஆஜராகுமாறு சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
தேர்தல் பணிகள் இருப்பதால் 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு விஜய் சி.பி.ஐ.யிடம் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகலாமா? எனவும் கேட்டிருந்தார். ஆனால் சி.பி.ஐ. 15-ந்தேதி டெல்லியில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை மதியம் விஜய் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
15-ந்தேதி காலை சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணைக்கு த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். அவருடன் த.வெ.க. நிர்வாகிகள் சிலரும் டெல்லி செல்கின்றனர்.
