காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் – 4ம் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியது

ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல் மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

339 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1749 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5470 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

மொத்தம் 2618 வாக்குச்சாவடிகள் (காஷ்மீர் 639, ஜம்மு 1979) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 777 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் 99 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 969 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 17-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும், 24ம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலில் 75.2 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools