டெல்லியில் தாக்குதல் நடத்த லஷ்கர் குழு திட்டம் – பஞ்சாப், காஷ்மீரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு
தலைநகர் டெல்லியில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை, பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரித்த நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர் அமைப்பு இதனைத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு IED வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ராய்யா புறக்காவல் நிலையம் அருகே ஒரு சந்தேகத்திற்கிடமான பையில் IED வெடிகுண்டு கண்டறியப்பட்டது. வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டது.
அதேபோல ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சபபோரா பகுதியில் மற்றொரு IED கண்டறியப்பட்டது. ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து அதை செயலிழக்கச் செய்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் வட காஷ்மீரில் கண்டெடுக்கப்படும் மூன்றாவது IED இதுவாகும். இதற்கு முன் பாரமுல்லா மற்றும் டாங்மார்க் சாலைகளிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. முன்னதாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக கருதப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
