Tamilசெய்திகள்

1 வயது குழந்தைக்கு அதிநவீன ‘நுண்துளை’ அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மலர், அடையார் மருத்துவமனை!

ம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் அடையார் மருத்துவமனை, ஒரு வயது சிறுமிக்கு நுண்துளை முறையிலான ‘வீடியோ அசிஸ்டட் தோராகோஸ்கோபிக்’ (VATS) அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது. இதன் மூலம், நுரையீரலின் செயல்படாத ஒரு பகுதி (இடது நுரையீரலின் கீழ்ப்பகுதி) பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது. பிறவியிலேயே ஏற்பட்ட இந்தக் குறைபாட்டை சரிசெய்யவில்லையென்றால், எதிர்காலத்தில் கடுமையான சுவாசப் பிரச்சனைகள், திரும்பத் திரும்ப வரும் நோய்த்தொற்றுகள், ரத்தக்கசிவு ஆகியவற்றோடு, இதயச் செயல்பாட்டை பாதிக்கும் அபாயமும் இக்குழந்தைக்கு இருந்திருக்கும்.

சுவாசப்பாதை மற்றும் நுரையீரலில் ஏற்படும் இந்த பிறவி குறைபாடு, குழந்தை தாயின் வயிற்றில் வளரும்போதே கண்டறியப்பட்டு, குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனால், சிறந்த சிகிச்சை பலன்களுக்காக அறுவை சிகிச்சையை மிகவும் பாதுகாப்பாக திட்டமிட மருத்துவர்களால் முடிந்தது. மிகவும் அரிதான பாதிப்பான இந்த பிறவிக் குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க VATS உத்தியை வெற்றிகரமாகப் பயன்படுத்தியிருப்பது, சென்னையில் இதுவே முதல் முறையாகும்.

அறுவைசிகிச்சையை, குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் கற்பக விநாயகத்தின் தலைமையிலான மருத்துவர்கள் குழு மேற்கொண்டது. இக்குழுவில் குழந்தைகளுக்கான அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் ராஜ், குழந்தைகள் நல முதுநிலை நிபுணர் டாக்டர் ஜி. பிரபாகரன், பச்சிளங்குழந்தைகள் நலப்பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர் எஸ். அருண் குமார், பச்சிளங்குழந்தை நலப்பிரிவின் இணை நிபுணர் டாக்டர் என்.கே.வி. விக்னேஷ்வர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்த அறுவைசிகிச்சை சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்தது. இதில், இடது நுரையீரலின் பாதிக்கப்பட்ட கீழ்ப்பகுதியை மருத்துவக் குழுவினர் மிகவும் கவனமாக அகற்றினர். மேலும், பெருந்தமனி வழியாக பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதிக்குச் செல்லும் இயல்புக்கு மாறான ரத்த ஓட்டத்தையும் தடுத்து அடைத்து அப்பிரச்சனைக்கு தீர்வு கண்டனர்.

இது குறித்து டாக்டர் கற்பக விநாயகம் கூறுகையில், “இந்த குறைபாடு இடது நுரையீரலின் உள்ளேயே இருந்ததாலும், இதற்கான ரத்த ஓட்டம் நேரடியாகப் பெருந்தமனியில் இருந்து வந்ததாலும், இது மிகவும் சவாலான ஒரு அறுவை சிகிச்சையாக அமைந்தது. குழந்தைகளின் மார்புக்கூடு மிகச்சிறிய அளவில் இருக்குமென்பதால், இந்த தோராகோஸ்கோபிக் அறுவை சிகிச்சையைச் செய்வது தொழில்நுட்ப ரீதியாகக் கடினமானது. இருப்பினும், வழக்கமான திறந்த நிலை அறுவைசிகிச்சையை விட, குறைந்த ஊடுருவல் உள்ள நுண்துளை அறுவைசிகிச்சைக்குப் பின் வலி குறைவாக இருக்கும்; மருத்துவமனையில் தங்கும் நாட்களும் குறையும் மற்றும் குழந்தை விரைவாகக் குணமடையும் என்பதால், நாங்கள் இந்த முறையை தேர்ந்தெடுத்தோம்,” என்றார்.

அறுவைசிகிச்சை முடிந்த இரண்டு மணி நேரத்தில் இக்குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அதன் பிறகு உடல்நலம் தேறியவுடன் வார்டுக்கு மாற்றப்பட்டது. அறுவைசிகிச்சைக்கு பிறகு மூன்றே நாட்களில் இக்குழந்தை மருத்துவமனையிலிருந்து நலமுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தைகளின் நுரையீரல் சுமார் ஒன்பது வயது வரை வளரும் என்பதால், அகற்றப்பட்ட பகுதிக்குப் பதிலாக மீதமுள்ள நுரையீரல் அந்தச் செயல்பாட்டை ஈடுசெய்யும். இதனால் இக்குழந்தை ஆரோக்கியமான, இயல்பு வாழ்க்கையை வாழ முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர், அடையார் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரியும், குழுமத்தின் முக்கிய முன்னெடுப்புகள் பிரிவின் துணைத் தலைவருமான திரு. வேணுகோபால் பட் கூறுகையில், “இந்த வெற்றிகரமான அறுவைசிகிச்சை, குழந்தைகளுக்கு அதிநவீன அறுவை சிகிச்சை செய்வதில் எங்களின் நிபுணத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. நோயாளிகள் விரைவாகக் குணமடையவும் சிறந்த சிகிச்சைப் பலன்களைப் பெறவும் உதவும் குறைந்த ஊடுருவலுள்ள சிகிச்சை நுட்பங்களில் எங்களது திறனுக்கும், கூர்நோக்கத்திற்கும் இது எடுத்துக்காட்டாக இருக்கிறது,” என்று தெரிவித்தார்.