தமிழக பா.ஜ.க தலைவர்களுடன் அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்துகிறார்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பா.ஜ.க. பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது. மத்திய மந்திரி அமித்ஷா நேரடியாக சென்னை வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தி சென்றார்.
இந்த கூட்டணி அமைந்த பிறகு அடுத்த கட்டமாக தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி 7 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த முடிவு செய்து உள்ளது. முதல் மாநாடு நெல்லையில் நடந்து முடிந்துள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்காக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே இந்தியா கூட்டணி கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தி வருகிறது.
தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாக குற்றம் சாட்டி ராகுல் காந்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார். பீகாரில் நடந்த போராட்டத்தில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலினும் பங்கேற்றார். தமிழகத்திலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பா.ஜ.க. அணிக்கு எதிரான அலையை உருவாக்க இந்தியா கூட்டணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதில் முதல் கட்டமாக வருகிற 7-ந்தேதி வாக்கு திருட்டுக்கு எதிரான மாநாட்டை காங்கிரஸ் கட்சி நெல்லையில் நடத்துகிறது.
எனவே தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான பிரசாரங்களை முறியடித்து கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி? இந்த கூட்டணி வெற்றிக்கான வியூகங்களை வகுப்பது எப்படி? என்பதை தமிழக அரசியல் களத்தின் நிலவரத்தை அறிந்து மேற்கொள்ள டெல்லி தலைமை முடிவு செய்து உள்ளது.
இதற்காக ஆலோசனை நடத்த தமிழக பா.ஜ.க. உயர்மட்ட குழு உறுப்பினர்களை அவசரமாக டெல்லிக்கு அழைத்து உள்ளது. அதன்படி இன்று காலை 6 மணிக்கு மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், பொன். ராதா கிருஷ்ணன், அண்ணாமலை, எச் ராஜா, கேசவ விநாயகன் ஆகியோர் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்று உள்ளார்கள். இன்று நண்பகலில் தமிழக குழுவினருடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த குழுவில் ஏற்கனவே டெல்லியில் இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகன், அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள். ஏற்கனவே வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிக்க பா.ஜ.க.வும் அதிரடி திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த காலங்களில் வாக்குத் திருட்டுகளை எப்படி அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பது பற்றிய ஆதாரங்களையும் திரட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் தமிழ்நாட்டிலும் சில முக்கிய தொகுதிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு தொகுதியில் சுமார் 19000 வாக்குகள் முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்கள். இந்த மாதிரி ஒவ்வொரு மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் நடத்தியுள்ள முறைகேடுகளையும் ஆதாரத்துடன் வெளியிட்டு அவர்களின் பிரசாரங்களை முறியடிக்கவும் திட்டம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றியும் தமிழக குழுவினருடன் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பா.ஜ.க.-அ.தி.மு.க கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் கூட்டணியில் மாற்றம் வரும் என்று பரப்பப்படும் வதந்திகளையும் முறியடிப்பது தொடர்பாக அமித்ஷா ஆலோசனை வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
