Tamilசெய்திகள்

பொங்கல் ஆடைக்கு பதில் பணம் – புதுச்சேரி அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘இலவச ஆடை’ வழங்கல் திட்டம் இனி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு 20 இலவச அரிசியும், மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. இதற்கிடையே புதுச்சேரி சட்டசபையில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். இந்த திட்டத்தை திலாசுப்பேட்டை ரேஷன் கடையில் 2 கிலோ இலவச கோதுமையை பொதுமக்களுக்கு வழங்கி முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அக்டோபர், நவம்பர் மாதத்துக்கான தலா 2 கிலோ வீதம் 4 கிலோ இலவச கோதுமை வழங்கப்பட்டது. இதன்பின்னர் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

இலவச அரிசி மற்றும் கோதுமை தொடர்ச்சியாக வழங்கப்படும். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகிறது. ஜனவரி 3-ந்தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.