Tamilசெய்திகள்

இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்

மத்திய அரசின் விவசாயம், தொழிலாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய ‘பாரத் பந்த்’ வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. INTUC, AITUC, HMS, CITU உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு சையுக்த கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த பாரத் பந்த் போராட்டத்தில் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்றும், நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் இதன் தாக்கம் இருக்கும் என்றும் AITUC பொதுச் செயலாளர் அமர்ஜீத் கவுர் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தால் இன்று, போக்குவரத்து மற்றும் அரசுத் துறை சேவைகளில் பாதிப்பு ஏற்படும். மேலும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) உள்ளிட்ட வங்கி அமைப்புகள் இதில் பங்கேற்பதால், பொதுத்துறை வங்கிகளின் சேவையில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

ஆனால் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது. ஊழியர்கள் வராததால் சில சேவைகள் பாதிக்கும். மேலும் வழக்கம்போல இயங்கும் பேருந்துகள், பள்ளிகள், பிற சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.