Tamilசெய்திகள்

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை – ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தந்த தொகுதிகள் என்பதை திமுகவிடம், காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. 28 தொகுதிகளில் 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். அத்துடன் கடந்த முறை வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16 தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் காட்டமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பின்பே தொகுதி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற எங்கள் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும் சமரசம் செய்யப்பட்டுவிட்டது. நம் போன்ற உண்மையான காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ஆண்டாண்டுக்கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளிப்போட்டிராத சிலர் விற்றுத் தின்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது.

இந்த மோசமான சூழலைக் கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது. பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மட்டுமே கட்சியல்ல. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும், உழைப்புமே கட்சி. பட்டியல் வெளியானதும் விரிவாகப் பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்குமென்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.