X

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழக மகளிரணியினர் அளித்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சை காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற காவல்துறையினர் அவரை முறைப்படி கைது செய்து விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இக்கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அவரது இல்லத்தின் முன் திரண்ட திமுகவினர் காவல்துறை வாகனத்தை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், “தம் மீதான இந்த நடவடிக்கையைக் காமெடியாகப் பார்ப்பதாகவும், அரசின் குறைகளைத் திசைதிருப்பவே தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும்” உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, இக்கைது நடவடிக்கையைக் கண்டித்துத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.