ஆந்திராவில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு
ஆந்திரப் பிரதேச மாநிலம் மாரடி மல்லி பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர்.
37 பேருடன் சென்ற பேருந்து நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சிந்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தனியார் பேருந்தில் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 பயணிகள் இருந்தனர். இந்தக் குழு புனித யாத்திரைக்காக பத்ராசலத்தைப் பார்வையிட்ட பிறகு அன்னாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நள்ளிரவுக்குப் பிறகு பேருந்து வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை வழியாகச் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்ததோடு, அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர், காயமடைந்த பயணிகள் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
