சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தீர்ப்பு! – 9 காவலர்களுக்கு மரண தண்டனை
தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு இடையே இன்று வழங்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக குற்றம் சாற்றப்பட்ட 9 காவலர்களுக்கு மரன தனடனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரங்கின் போது, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் நேர கட்டுப்பாட்டை மீறி தங்களது செல்போன் கடைய திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளம் போலீசார் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அங்கு இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் தந்தை – மகன் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் அடுத்தடுத்த நாளில் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேர் மீது வழக்குப்பஹ்டிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் சிறையிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற கண்காணிப்பில் நடந்த இந்த வழக்கில் தற்போது சிபிஐ 1500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
இதற்கிடையே, வழக்கு விசாரணை முடிந்த நிலையில், கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாவட்ட நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு கூறினார். அதில், ஜெயராஜ் – பெனிக்ஸ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 9 பேரும் குற்றவாளிகள். இவர்களுக்கு தனட்னை வழங்குவது சம்பந்தமாக சிபிஐ மற்றும் மாநில அரசு தங்களது கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும், என்று தெரிவித்ததோடு, கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர்களின் மனநலம், உடல்நிலை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், என்று தெரிவித்தவர், மார்ச் 30 ஆம் தேதி தண்டனை விபரம் அறிவிக்கப்படும், என்று தெரிவித்தார்.
ஆனால், மத்திய, மாநில அரசின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படாததால் வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் தண்டனை விபரம் அறிவிக்கப்படாமல், ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு தண்டனை விபரம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் குற்றவாளிகளான 9 காவலர்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து, சாமிதுரை ஆகிய 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
