நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று கடலம்மா மாநாடு – சீமான் பங்கேற்று பேசுகிறார்
நாம் தமிழர் கட்சி சார்பில் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து தொடர்ச்சியாக மாநாடு நடத்தப்படுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு-மாடு, மரங்களின் மாநாடு மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார். இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை, கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கடல்சார் வாழ்வாதாரத்தையும், கடலையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் ‘ஆதி நீயே, ஆழித்தாயே’ என்ற முழக்கத்தை முன்வைத்து கடலம்மா என்ற தலைப்பில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அதன்படி இன்று மாலை நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நடத்தும் இந்த கடலம்மா மாநாடு சீமானின் மற்ற மாநாடுகளை போல சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் மீனவர் பிரச்சனை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் மேடை அமைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மூலம் ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மீனவ மக்கள் பங்கேற்பார்கள் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
