Tamilசெய்திகள்

பாராளுமன்ற மாநிலங்களவையில் அமளி – ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய்சிங் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் முதல் நாளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

2-வது நாளான வெள்ளிக்கிழமை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினர். மணிப்பூர் ரத்தம் சிந்துகிறது என்ற முழக்கத்துடன் அவையின் மைய பகுதியில் முற்றுகையிட்டனர். இதனால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் 2-வது நாளாக முடங்கி இருந்தன. இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று 3-வது நாளாக அமளி நிலவியது.

பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சி எம்.பி.க்கள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி முறையிட்டார். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, மணிப்பூர் விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் பிரதமர் விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அவையை 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். 12 மணிக்கு பிறகு பாராளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினார்கள். இதை தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை 2-வது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து விவாதிக்க கோரி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தன. பாராளுமன்ற மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தில் அமளி காணப்பட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த கோரி 11 கட்சிகள் நோட்டீஸ் அளித்தன.

இது தொடர்பாக அவை தலைவர் ஜெகதீப்தன்கருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்ஒபிரையலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியால் அவை முதலில் 12 மணி வரையும், 2-வது முறையாக 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் கடும் அமளியில் ஈடுபட்டார். அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளி செய்தார். இதைத் தொடர்ந்து சஞ்சய்சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.