அடுத்த மூன்று வாரங்களுக்கு ஈரான் மீது மிக கடுமையான தாக்குதல்கள் தொடரும் – அமெரிக்க அதிபர் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையில் அந்த நாட்டுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் நடத்தப்படும் இந்தத் தாக்குதல் அதன் இலக்குகளை நெருங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு ஈரான் மீது ‘மிகக் கடுமையான’ (Extremely Hard) தாக்குதல்கள் தொடரும் என்று தெரிவித்தார்.
ஈரானின் கடற்படை மற்றும் ஏவுகணை உற்பத்தித் தளங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய ட்ரம்ப், ஒருவேளை ஈரான் உடன்படிக்கைக்கு வரத் தவறினால் அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் முழுமையாகத் தகர்க்கப்படும் என்றும், அந்த நாடு ‘கற்காலத்திற்கு’ (Stone Age) தள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.
உள்நாட்டில் ட்ரம்ப்பின் செல்வாக்கு (Approval Ratings) 40 சதவீதத்திற்குக் கீழ் சரிந்துள்ள நிலையிலும், உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள சூழலிலும், இந்தப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா தீவிரமான அழுத்தத்தைப் பிரயோகித்து வருகிறது.
