Tamilசெய்திகள்

ஜனவரி மாதம் வேட்பாளர்களுக்கான தேர்வு நேர்காணலை நடத்த த.வெ.க தலைவர் விஜய் திட்டம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. அதிலும், தமிழக அரசியல் அரங்கில் புதிய வரவான த.வெ.க. சட்டசபை தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாத பொருளாக மாறி வருகிறது.

பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்கத்தில் நடந்தது.

இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். இனி வரும் நாட்களில் ஈரோடு மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ச்சியாக ஜனவரி 2-வது வாரம் வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்தநிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். தொகுதிக்கு 4 பேர் வீதம் அவர் தேர்வு செய்துள்ளார். அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் சிலரும் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் என குறிப்பிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் தேர்வை விஜய் நடத்தி முடித்து, உடனடியாக அதற்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்.