மாணவர்களுக்கான 2ம் பருவம் பாடப் புத்தகங்கள் தயார் – பள்ளிக்கல்வி இயக்குநரம் அறிவிப்பு
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வுகள் வருகிற 26-ந்தேதியுடன் முடிய உள்ளன. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந்தேதி வரை 9 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2-ம் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிடங்கில் மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து அவர் கூறும்போது, இந்த கல்வியாண்டில் 2-ம் பருவம் அக்டோபர் 6-ந்தேதி அன்று தொடங்க உள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்று 7-ம் வகுப்பு வரை பயிலும் 32 லட்சத்து 60 ஆயிரத்து 960 மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் 23 லட்சத்து 5 ஆயிரத்து 211 மாணவர்களும், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9 லட்சத்து 55 ஆயிரத்து 749 மாணவர்களும் பயன் பெறுவார்கள் என்றார்.
