Tamilசெய்திகள்

அதிமுகவை அழித்த பெருமை எடப்பாடி பழனிசாமியையே சாரும் – ஓ.பன்னீர் செல்வம் தாக்கு

கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் நேற்று கோவில்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான பி. கீதாஜீவன் தலைமை தாங்கினார். ஜி.வி. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “சட்டப்பேரவையின் மாண்பைக் காத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது வழியில் இன்று முதல்வர் ஸ்டாலினும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். திமுக கூட்டணி என்பது கொள்கை ரீதியிலான நிரந்தரக் கூட்டணியாக உள்ளது.

கடந்த காலங்களில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்த போது, அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அந்த ஒப்பந்தத்தைத் துச்சமாக மதித்தார். மாறாக, தற்போது திமுக கூட்டணியில் இணைந்தவுடன் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுவே உண்மையான அரசியல் பண்பாடு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்திவிட்டார். ஆனால், தற்போது 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஒரே முதல்வர் ஸ்டாலின்தான். எடப்பாடி பழனிசாமியும் உதயகுமாரும் இணைந்து அதிமுகவைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டனர். அக்கட்சியை அழித்த பெருமை அவர்களையே சாரும். என்னைப் பற்றியோ, எனது அரசியல் பயணம் குறித்தோ பேச அவர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை.

முதல்வர் எடுத்த நடவடிக்கைகளால் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெரும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் தாங்கள் படித்த மாவட்டங்களிலேயே வேலை வாய்ப்பைப் பெறும் நிலை உருவாகியுள்ளது.” என்றார்.