மக்களை அச்சுறுத்தி வந்த புலி வனத்துறை கூண்டில் சிக்கியது!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 24-ந் தேதி புலி தாக்கி நாகியம்மாள்(வயது60) என்பவர் உயிரிழந்தார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பகுதியில் சுற்றி திரியும் ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் புலியின் நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் புலியை பிடிக்க புலி நடமாட்டம் உள்ள 5 இடங்களில் கூண்டு வைத்தும், 29 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். அப்போது அது அந்த பகுதியில் நடமாடி வந்த வயதான ஆண்புலி என்பதும், இந்த புலி தான் நாகியம்மாளை தாக்கி கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடங்கினர். இதற்காக 40 பேர் கொண்ட வனத்துறை குழுவினர் 4 குழுக்களாக பிரிந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கூண்டுகளை வைத்தும் காத்திருந்தனர். ஆனால் புலி கூண்டுக்குள் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. மேலும் அப்பகுதிகளில் உள்ள கால்நடைகளையும் புலி வேட்டையாடி வந்தது. இதனால் ஆடு, மாடுகளை வைத்து வாழ்வாதாரத்தை ஈட்டி வரும் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மேலும் புலி நடமாட்டத்தால் அச்சத்திலும் இருந்து வந்தனர். பள்ளி மாணவர்கள் கூட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டு வந்தனர். தொடர்ந்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மாவனல்லா பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் டி-37 புலி சிக்கியது. புலி சிக்கியதை அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பிடிபட்ட புலியை பார்வையிட்டனர். அப்போது அது 12 வயது மதிக்கத்தக்க ஆண்புலி என்பதும், வேட்டையாட முடியாததால் ஊருக்குள் புகுந்து மக்களையும், கால்நடைகளையும் தாக்கி வந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து பிடிபட்ட புலியை வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். கூண்டில் சிக்கிய புலியை வனத்திற்குள் விடலாமா? அல்லது வனவிலங்கு மையத்திற்கு அனுப்பி வைக்கலாமா? என வனத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 16 நாட்களாக மசினகுடி, மாவனல்லா மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த டி-37 புலி சிக்கியதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
