தற்காலிக ஊழியர்களை போராட தூண்டுகிறார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்காலிக ஊழியர் கள் போராட்டம் தொடர்வது பற்றி நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள் பணி என்பது வருடத்திற்கு 11 மாதம் என்பது மட்டுமே. அது மீண்டும் தொடரும்போது இடையில் ஒரு நாள் விடுமுறை வழங்கி விட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பணிபுரிவார்கள்.
இதுபோன்று பணியில் இருப்பவர்களை எந்த அரசும் பணி நிரந்தரம் செய்ய முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநில அரசும் பணிநிரந்தரம் செய்ய முடியாது. அண்ணாமலையிடம் வேறு மாநிலத்தில் பணி நிரந்தரம் செய்திருக்கிறார்களா என்று பத்திரிகையாளர்களாகிய நீங்களே கேட்டு சொல்லவும்.
பணி நிரந்தரம் செய்தால் நீதிமன்றம் தலையிடும். ‘கம்யூனல் ரொட்டேசன்’ இல்லாமல் எந்த பணியாளரையும் பணிநிரந்தரம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் கூறும். இந்த நிலையில் இதனை தெரிந்து கொண்டே போராட்டம் செய்வது என்பது ஒரு சிலர் தூண்டிவிட்டு நடத்துவது. அரசு ஊழியர் போராட்டம் அல்ல, இன்னொன்று ஊழியர் சங்கங்கள் அல்ல, தனிநபரின் தூண்டுதல் இருக்கிறது என்று ஏற்கெனவே நான் சொல்லியிருக்கிறேன். பெங்களூருவை சேர்ந்த ஒருவர் இங்கு போராட்டத்தை தூண்டி விட்டார், நாங்கள் அவர் மீது புகார் கொடுத்து இருக்கிறோம்.
இதுபோன்ற தூண்டுதல்களை மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஊழியர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது. போராட்டங்கள் என்பது இயல்பாக நடக்க வேண்டும். தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் நிலையில் இதுபோன்று தூண்டிவிடப்படும் போராட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சொல்லியிருந்தேனே தவிர போராட்டங்களை கொச்சைப்படுத்துவது என்பது தி.மு.க. அரசாங்கத்தின் நோக்கம் அல்ல.
நான் இப்போது அரசியல்வாதியாக இருக்கலாம், இதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். 1980களிலே நான் ஏற்கெனவே சட்டமன்றத்தில் பதிவு செய்திருந்தேன். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அவரது அரசை எதிர்த்து தலைமைச் செயலகத்திலேயே போராட்டம் நடத்தி எம்.ஜி.ஆரையே கீழே வரவழைத்து 500 பெண் தொழிலாளர்கள் முன் பேச வைத்து அவருக்கு நேராக விவாதம் செய்தவன் நான். அதனால் தொழிற்சங்கத்தைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
